துணிப்பை, சாக்கு பை, வாழை இலைகளை பயன்படுத்துகின்றனர்: பிளாஸ்டிக் மாற்று பொருட்களுக்கு மாறிய பொதுமக்கள்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் அதற்கு ஆதரவு தெரிவித்து மாற்று பொருளாக துணிப்பை, சாக்கு பை, வாழை இலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி,
தமிழகம் முழுவதும் கடந்த 1–ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் வியாபாரிகள், பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்களின் கண்காட்சி வைக்கப்பட்டு, அதில் துணிப்பை, சாக்கு பை, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருளாக எந்த வகையான பொருட்களை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் தடை எதிரொலியாக பொதுமக்களும் மாற்று பொருட்களை பயன்படுத்தி அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வியாபாரிகள் பூ, சில வகை பழங்களை இலைகளில் மடித்து கொடுத்து வருகின்றனர். பலச்சரக்கு கடைகளில் காகித பை, துணிப்பைகளில் பொருட்கள் எடை அளவு அடிப்படையில் பொட்டலங்கள் போட்டு கொடுக்கின்றனர். வணிக நிறுவனங்களில் பாலிதீன் பைகளை தவிர்த்து தற்போது துணிப்பைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
மேலும் காய்கறி சந்தைகளில் பொதுமக்கள் தாங்களாகவே துணி மற்றும் சாக்கு பைகளை கொண்டு வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். டீக்கடை, ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வியாபாரிகள் மாற்று பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இறைச்சிகளை வாழை இலைகளில் மடித்து கொடுக்கின்றனர். மேலும் பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து இறைச்சிகளை வாங்கிச் சென்றனர்.
வாடிப்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் கலையரசி தலைமையில் இளநிலை உதவியாளர்கள் சங்கரன், பிச்சைமுத்து, சுகாதாரப்பணிமேற்பார்வையாளர் மருதையா, உதவியாளர் நாகராஜன் உள்ளிட்ட பணியாளர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு முகாம், விளக்க சுவரொட்டிகள், பேனர்கள் மூலம் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்தும், அதற்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்து எடுத்துரைத்தனர். இதுதவிர வாடிப்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் கூடும் இடங்கள், சுகாதார வளாகங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை புகைப்படங்கள் வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.