ஆண்டாள் கோவிலை பார்த்து பிரமித்த வெளிநாட்டினர்


ஆண்டாள் கோவிலை பார்த்து பிரமித்த வெளிநாட்டினர்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-03T01:58:46+05:30)

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலை பார்த்து வெளிநாட்டினர் பிரமித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஹாலந்து, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த 35 பேர் கொண்ட குழுவினர் விடுமுறையில் இந்தியா வந்துள்ளனர். சென்னை வந்த அவர்கள் சுமார் 15 ஆட்டோக்களை வாங்கி ‘ரிக்‌ஷா சேலஞ்ச்‘ என்ற அமைப்பின் மூலம் தமிழ்நாடு முழுவதும் ஆட்டோவிலேயே பல ஊர்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இந்த குழுவினர் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு நேற்று வந்து பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் தமிழக அரசின் சின்னமாக விளங்கும் ராஜகோபுரம் மற்றும் பெரிய தேர், கோவிலிலுள்ள சிற்பங்கள், கண்ணாடி மாளிகை போன்றவற்றை ஆர்வமுடன் ரசித்து பார்த்தனர். மேலும் ஆண்டாள் கையில் உள்ள கிளியை வியந்து பார்த்து அதை வணங்கினர்.

குழுவில் இடம்பெற்றுள்ள மிக்கே, ஹைபென் ஏஞ்சலோ, மைக், ஹெலானாடிம் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆண்டாள் கோவிலைப் பார்த்து பிரமிப்பு அடைந்தோம். அழகான கோவிலையும், அன்பான மக்களையும் இங்கே நாங்கள் பார்த்தோம். குறிப்பாக ஆண்டாளின் கிளி எங்கள் குழுவினரை ஆச்சரியமடைய வைத்தது. இந்த கிளியைப் பற்றி மட்டுமல்ல இந்த கோவிலில் உள்ள தெய்வமான ஆண்டாளைப் பற்றியும் தெரிந்து கொண்டோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு கூறினர்.

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு சிறப்பாக விளங்கும் பால்கோவாவை வாங்கி அனைவரும் ருசித்து சாப்பிட்டனர். தனிச்சுவைமிக்க பால்கோவா தயாரிக்கும் முறை குறித்து கேட்டு அறிந்தனர். பால்கோவா சாப்பிட்ட அனுபவத்தை மறக்கவே இயலாது என்று தெரிவித்தனர்.

பின்னர் இந்த குழுவினர் ஆட்டோக்கள் மூலம் நெல்லை மாவட்டத்துக்கு சென்றனர்.

Next Story