ரூபாய் நோட்டுகளை சிதற விட்டு நூதனமுறையில் விவசாயியிடம் பணம் திருட்டு
ரூபாய் நோட்டுகளை சிதற விட்டு, நூதனமுறையில் விவசாயியிடம் பணம் திருடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காளனம்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 55). விவசாயி. அவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர், அதேபகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் சண்முகவேல், வேடசந்துர் சாலைத்தெருவில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார்.
தனது மனைவியின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.47 ஆயிரத்தை எடுத்தார். அதனை, தனது மொபட்டின் பக்கவாட்டு பகுதியில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார். சிறிதுநேரத்தில் அங்கிருந்து அவர் மொபட்டில் புறப்பட்டார். வேடசந்தூர் பழைய தீயணைப்பு நிலையம் அருகே மொபட் சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் சண்முகவேலின் கவனத்தை திசை திருப்பினர். அதாவது, 10 ரூபாய் நோட்டுகளை அவர்கள் சாலையில் சிதறவிட்டனர். மேலும் உங்களது பாக்கெட்டில் இருந்து ரூபாய் நோட்டுகள் கீழே விழுவதாக அவர்கள் சண்முகவேலிடம் கூறினர்.
இதனையடுத்து மொபட்டில் இருந்து இறங்கிய அவர், சாலையில் கிடந்த 10 ரூபாய் நோட்டுகள் 6-ஐ எடுத்தார். அந்த சமயத்தில், மொபட் பெட்டியில் இருந்த ரூ.47 ஆயிரத்தை அவர்கள் எடுத்து கொண்டனர். இதனை அறியாத சண்முகவேல் மொபட்டில் வீட்டுக்கு சென்றார். பின்னர் பணத்தை எடுப்பதற்காக பெட்டியை திறந்தார். ஆனால் அதற்குள் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நூதனமுறையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், வேடசந்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை சண்முகவேல் எடுத்து கொண்டிருந்தபோது, மொபட்டில் இருந்த சாவியை எடுத்து பெட்டியை திறந்து ரூ.47 ஆயிரத்தை திருடியிருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வங்கி, பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றின் முன்பு உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story