சபரிமலையில் பெண்கள் தரிசனத்துக்கு எதிர்ப்பு: களியக்காவிளையில் கேரள பஸ்களை சிறைபிடித்து போராட்டம்


சபரிமலையில் பெண்கள் தரிசனத்துக்கு எதிர்ப்பு: களியக்காவிளையில் கேரள பஸ்களை சிறைபிடித்து போராட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2019 11:00 PM GMT (Updated: 2 Jan 2019 9:22 PM GMT)

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து களியக்காவிளையில் கேரள பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடந்தது. பதற்றம் நீடிப்பதால் குமரி எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

களியக்காவிளை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள முயற்சி எடுத்து வந்தது. இதற்கு அய்யப்ப பக்தர்களும், பா.ஜனதா, இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் 2 பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள், சாலை மறியல் போன்றவை நடந்தன. கேரள-குமரி எல்லையிலும் பதற்றம் நீடித்தது. நெய்யாற்றின்கரை, பாறசாலை உள்ளிட்ட பல இடங்களில் சாலை மறியல் நடந்தது. போராட்டம் தீவிரமடைந்ததால் நெய்யாற்றின்கரையில் போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இதற்கிடையே குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சந்திப்பில் நேற்று மாலை 4 மணிக்கு அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர், பா.ஜனதாவினர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கேரள பஸ்களை சிறைபிடித்து அதிலிருந்த பயணிகளை கீழே இறக்கி விட்டனர்.

பின்னர் கேரள பஸ்களை குமரிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று அந்த பஸ்களை திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். எனினும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.

கேரள அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பதற்றம் நீடித்ததால் போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீசாரின் பேச்சில் சமரசம் ஏற்படவில்லை.

இதனையடுத்து போராட்டம் நீடித்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரித்தனர். மேலும், நெடுஞ்சாலையில் போராட்டம் நீடிப்பதால் குமரி மாவட்ட மக்களும் ஏராளமானோர் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிப்பதாக கூறினர். தொடர்ந்து சிறிது நேரம் மட்டும் அங்கேயே நின்ற போராட்டக்காரர்கள், பின்னர் கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு மாலையில் இருந்து கேரள பஸ்கள் குமரிக்கு இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதேபோல் தமிழக பஸ்களும் திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படாமல் களியக்காவிளை வரை மட்டும் சென்றது. இதனால் இரவு நேரத்தில் குமரி மாவட்ட பயணிகளும் சொந்த ஊருக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பதற்றம் நீடிப்பதால் குமரி எல்லையில் தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கொல்லங்கோடு அருகே கேரள எல்லையான ஊரம்பு சந்திப்பு பகுதியில் பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு திரண்டு கேரள அரசு பஸ்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் சரண கோஷம் எழுப்பியவாறு ஊரம்பு பகுதியில் இருந்து கண்ணாநாகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

Next Story