ஊட்டி, குன்னூரில் உறைபனி பொழிவு, கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ஊட்டி, குன்னூரில் உறைபனி பொழிவு, கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 3 Jan 2019 3:30 AM IST (Updated: 3 Jan 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி, குன்னூரில் உறைபனி பொழிவு நிலவுகிறது. கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசனுமாக உள்ளது. நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர்காலம் நிலவுகிறது. இந்த குளிர்காலத்தை அனுபவிக்க இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். ஊட்டியில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் நீர்ப்பனி பொழிவு காணப்பட்டது. இதையடுத்து ஊட்டி நகரில் உறைபனி பொழிவு தொடங்கியது.

ஆனால், சில நாட்கள் மட்டுமே உறைபனி பொழிவு இருந்தது. பின்னர் ஊட்டியில் லேசான சாரல் மழை பெய்ததாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதாலும் உறைபனி பொழிவு இல்லை. இதனால் ஊட்டி நகரில் குளிர் குறைந்து இருந்தது. இந்த நிலையில் ஊட்டியில் மீண்டும் உறைபனி பொழிவு தொடங்கி உள்ளது. அதன் காரணமாக அதிகாலை, மாலை, இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் குளிரை தாக்குப்பிடிக்க கம்பளி ஆடைகளை அணிந்து உள்ளனர்.

இதற்கிடையே நேற்று அதிகாலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானம், குதிரை பந்தய மைதானம், ரெயில் நிலைய வளாகம், எச்.பி.எப்., தலைகுந்தா, பார்சன்ஸ்வேலி, பைக்காரா, அனுமாபுரம், நடுவட்டம், அவலாஞ்சி, அப்பர்பவானி, முக்குருத்தி உள்ளிட்ட இடங்களில் புற்கள் மீது வெண்மையை போர்த்தியது போல் பனித்துளிகள் உறைந்து இருந்தன. புல்வெளிகளில் எங்கு பார்த்தாலும் உறைபனி கொட்டி கிடக்கிறது. இதனால் பசுமையாக காணப்பட்ட புற்கள் வெள்ளை போர்வை போர்த்தியது போன்று காட்சி அளிக்கிறது.

ஊட்டியில் கடுங்குளிர் நிலவுவதால், பொதுமக்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள் குளிரை சமாளிக்க ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் நேற்று காலையில் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். குளிர் காயும் போது உடல் வெப்பம் அடைந்தாலும், அப்பகுதியை விட்டு சிறிது தூரம் சென்ற உடன் மீண்டும் குளிர் வாட்டுகிறது. அதன் காரணமாக பகலிலும் பொதுமக்கள் கம்பளி ஆடைகளுடன் வலம் வருகின்றனர்.

ஊட்டியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி இருந்தது. உறைபனி பொழிவால் தினமும் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், அலுவலக வேலைகளுக்கு செல்கிறவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டுனர்கள் என அனைத்து தரப்பினரும் அவதி அடைந்து உள்ளனர். வீட்டில் தண்ணீரை கொதிக்க வைக்க நீண்ட நேரம் பிடிக்கிறது. திறந்தவெளியில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது பனி படர்ந்து இருப்பதால், அவை எளிதில் ‘ஸ்டார்ட்’ ஆவது இல்லை. அதன் என்ஜின் பகுதியில் சுடு தண்ணீர் அல்லது தீ காட்டி சூடேற்றி இயக்கப்படுகிறது.

காலையில் வீடுகளில் இருந்து வேலைக்கு செல்ல தாமதம் ஆகிறது. ஊட்டியில் நிலவும் கடுங்குளிருக்கு மத்தியில் தேநீர் கடையில் டீ வாங்கினால், உடனே சூடு குறைந்து விடுகிறது. உறைபனி பொழிவால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் உள்ள புற்கள் கருக தொடங்கி விட்டன. வருகிற நாட்களில் தொடர்ந்து உறைபனி பொழிவு காணப்பட்டால், வனப்பகுதிகளில் உள்ள புற்கள் கருகி காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது.

இதேபோல் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் உறை பனியின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் புல்வெளிகள், தேயிலை மற்றும் காய்கறி செடிகளில் பனி படர்ந்து இருந்தது.

மேலும் வீடுகளில் பாத்திரங்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் உறைந்தது. கடுங்குளிர் காரணமாக வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். கடுங்குளிரால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 

Next Story