தாதரில் துணிகரம் சுவரில் துளை போட்டு நகைக்கடையில் கொள்ளை பக்கத்து கடையிலும் ரூ.50 ஆயிரம் திருட்டு
தாதரில் சுவரில் துளை போட்டு நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்ற மர்மஆசாமிகள் பக்கத்து கடையிலும் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றனர்.
மும்பை,
தாதரில் சுவரில் துளை போட்டு நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்ற மர்மஆசாமிகள் பக்கத்து கடையிலும் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளை
மும்பை தாதர் மேற்கில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரானடே சாலையில் பிரஜாபதி ராஜாராம் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. நேற்று காலை வழக்கம் போல கடையை திறப்பதற்காக வந்தார். கடையை திறந்த அவருக்கு கடும் அதிர்ச்சி காத்து இருந்தது.
கடையில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தன. கடையின் சுவரில் ஆள் வந்து செல்லும் அளவுக்கு பெரிய துளை ஒன்று இருந்தது. இதை பார்த்து அவர் கடும் அதிர்ச்சியில் உறைந்தார்.
அவரது கடையையொட்டி அலங்கார மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றும் உள்ளது. அந்த கடைக்குள் இருந்தபடி மர்மஆசாமிகள் சுவரில் துளை போட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று நினைத்த பிரஜாபதி ராஜாராம் உடனே இதுபற்றி சிவாஜி பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
தகர கூரையை பிரித்து...
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி சென்றிருந்தது தெரியவந்தது. அந்த கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் காணாமல் போயிருந்தது.
நள்ளிரவு நேரத்தில் அந்த கடையின் தகர மேற்கூரையை உடைத்து கொண்டு மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து பணத்தை திருடியுள்ளனர். பின்னர் அதையொட்டி உள்ள நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்காக சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்தனர். இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்த நகைகளையும் அள்ளி சென்று தப்பியுள்ளனர்.
போலீஸ் விசாரணை
லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை அவர்கள் அள்ளிச்சென்றது தெரியவந்தது. கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக போலீசார் ரானடே சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகை சோதனை நடத்தினார்கள்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்ப சோதனை நடத்தப்பட்டது. அந்த நாய் கடையில் இருந்து சிறிது தூரம் ஓடி விட்டு நின்று கொண்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் இரண்டு கடைகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தாதரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story