பிளாஸ்டிக்கிற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துங்கள் - பொதுமக்களுக்கு , கலெக்டர் வேண்டுகோள்


பிளாஸ்டிக்கிற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துங்கள் - பொதுமக்களுக்கு , கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 Jan 2019 4:18 AM IST (Updated: 3 Jan 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துங்கள் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். திருப்பூர் அவினாசி ரோடு புஷ்பா ரவுண்டானா அருகே நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக உணவு மற்றும் வணிக நிறுவனங்களை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் கூறியதாவது:-

திருப்பூர்,



தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றுவது குறித்து சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்க ஒருமுறை பயன்பாடு மற்றும் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டின் மீதான தடை கடந்த 1-ந் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை பயன்படுத்துவது முழுமையாக தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது தொடர்பாக பொதுமக்கள் அறிந்திடும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மாற்று பொருட்கள் வழங்குவதற்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு அடைவது குறித்தும், மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், மலட்டுத்தன்மை, ஹார்மோன் சுரப்பில் சமச்சீர் இன்மை மற்றும் இதர உடல்நலக்குறைவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்சினைகள் ஏற்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் அனைவரும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்குகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். முழுமையாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து நிலம், நீர் மற்றும் காற்று ஆகிய இயற்கை வளங்களை பாதுகாத்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிகாண்பதோடு அனைவரும் நெகிழி பொருட்களை தவிர்த்து மண் வளத்தினையும் பேணிக்காக்க வேண்டும். வணிக நிறுவனங்களும், பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை கொண்டுவர முன்வர வேண்டும்.

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரி வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலுமாக தவிர்த்து அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தொடங்கி அந்த பகுதியில் உள்ள கடைகளை ஆய்வு செய்து பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் துணிப்பைகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தமிழ்செல்வன், மாநகர் நல அலுவலர் பூபதி, மாநகராட்சி உதவி ஆணையர் வாசுக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story