திருப்பூரில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்


திருப்பூரில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:48 PM GMT (Updated: 2019-01-03T04:18:42+05:30)

திருப்பூரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து திருப்பூர் மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியைக்கு வந்துள்ள கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர், 

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரையில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 140 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி தலைமையாசிரியையாக பிரேமா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்த பள்ளி தலைமையாசிரியைக்கு நேற்று காலை தபால் மூலம் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை பிரித்து படித்துப்பார்த்த தலைமையாசிரியை பிரேமா அதிர்ச்சி அடைந்தார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

மண்ணரை பகுதியில் சோதனை சாவடி அருகே உள்ள பேக்கரியின் மாடியில் ஒரு கிளப் செயல்பட்டு வருகிறது. இந்த கிளப்பில் சீட்டாட்டம், போதைபொருட்கள் விற்பனை, லாட்டரி விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றன. இங்கு வந்து பணத்தை இழந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை தபால் மற்றும் தொலைபேசி மூலம் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்தோம்.

இதற்காக போலீசார் எங்களை தேடி வருகிறார்கள். இதற்கு பிறகும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மண்ணரை பகுதியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் திருப்பூர் மாநகரில் அமைந்துள்ள அனைத்து தனியார் பள்ளிகளை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வாசகம் அனைத்தும் ஒரு வெள்ளை தாளில் கணினியில் டைப் செய்யப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தின் உறையின் மீது சாகுல் அமீது, தந்தை பெயர் பசீர், 111, ஊத்துக்குளி மெயின் ரோடு, மண்ணரை-641 607 என்ற முகவரி எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை படித்தவுடன் தலைமையாசிரியை பதற்றம் அடைந்தார். இதுதொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் தகவல் தெரிவித்துள்ளார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து தலைமையாசிரியை பிரேமாவிடம் கேட்ட போது, வெடிகுண்டு மிரட்டல் கடிதம் தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் தகவல் தெரிவித்தோம். வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றார். இந்த சம்பவத்தால் மண்ணரை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீஸ் தரப்பில் கூறும்போது, சம்பந்தப்பட்ட இடத்தில் கிளப் செயல்பட்டால் அதை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த கிளப் மூலமாக பாதிப்படைந்தவர்களில் ஒருவர் இந்த கடிதத்தை அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது என்று தெரிவித்தனர்.

Next Story