திருப்பூரில், ஒரே இடத்தில் வழக்குகளை தாக்கல் செய்ய வசதியாக கணினி மையம்


திருப்பூரில், ஒரே இடத்தில் வழக்குகளை தாக்கல் செய்ய வசதியாக கணினி மையம்
x
தினத்தந்தி 3 Jan 2019 4:18 AM IST (Updated: 3 Jan 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

ஒரே இடத்தில் வழக்கு களை தாக்கல் செய்ய வசதியாக திருப்பூர் கோர்ட்டு வளாகத்தில் கணினி மையத்தை மாவட்ட நீதிபதி அல்லி தொடங்கிவைத்தார்.

திருப்பூர், 

திருப்பூர், அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலையில் தாலுகா கோர்ட்டுகளும், திருப்பூர் லட்சுமி நகரில் மாவட்ட கோர்ட்டும் அமைந்துள்ளன. குற்ற வழக்குகளை போலீசார் அந்தந்த கோர்ட்டுகளில் தாக்கல் செய்து வந்தனர். அதுபோல் வக்கீல்களும் சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்கு சென்று தாக்கல் செய்து வந்தார்கள். போலீசார் மற்றும் வக்கீல்களின் வசதிக்காக ஒவ்வொரு தாலுகா கோர்ட்டு வளாகத்திலும் ஒருங்கிணைந்த வழக்குகளை தாக்கல் செய்யும் கணினி மையம் நேற்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் கோர்ட்டு வீதியில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் இந்த கணினி மையத்தை திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அல்லி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இதில் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கோகிலா, இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி முகமது ஜியாபுதீன், தலைமை குற்றவியல் நீதிபதி ஜெகநாதன், நீதிபதிகள் மோகன ரம்யா, நித்யகலா, கவியரசன், பழனி, கிருஷ்ணகுமார், கோர்ட்டு மேலாளர் திருநாவுக்கரசு, பார் அசோசியேசன் தலைவர் பழனிச்சாமி, அரசு வக்கீல் சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மையத்தில் போலீசார் மற்றும் வக்கீல்கள் வழக்குகளை தாக்கல் செய்து விட்டால் சம்பந்தப்பட்ட கோர்ட்டுகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும். உரிமையியல் வழக்குகளுக்கு தனியாகவும், குற்றவியல் வழக்குகளுக்கு தனியாகவும் தாக்கல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. மையத்தில் வழக்குகளை தாக்கல் செய்ததற்கான ஒப்புகை சீட்டும் வழங்கப்படும்.

இந்த மையத்தின் மூலமாக போலீசார் மற்றும் வக்கீல்கள் வழக்குகளை ஒரே இடத்தில் தாக்கல் செய்ய எளிய நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

இதுபோல் அனைத்து தாலுகா கோர்ட்டுகளிலும் தலா ஒரு கணினி மையமும், திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் ஒரு கணினி மையமும் திறக்கப்பட்டுள்ளது. 

Next Story