கலெக்டர் அலுவலகம் முன்பு மத்திய பாதுகாப்பு படை வீரரின் மனைவி குடும்பத்துடன் ‘தர்ணா’ மாயமான கணவரை மீட்டு தரக் கோரிக்கை
மாயமான கணவரை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு மத்திய பாதுகாப்பு படை வீரரின் மனைவி குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினார்
நெல்லை,
பாளையங்கோட்டை பட்டுபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 38). இவர் மராட்டிய மாநில எல்லை பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் சண்டிகாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதைதொடர்ந்து விடுமுறை எடுத்து கொண்டு கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி பாளையங்கோட்டைக்கு வந்தார். பின்னர் விடுமுறை முடிந்து 29-ந் தேதி நெல்லையில் இருந்து திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சண்டிகாருக்கு புறப்பட்டு சென்றார். அதன் பிறகு அவர் மாயமானார். அண்ணாத்துரை எங்கு இருக்கிறார்? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து அண்ணாத்துரை மனைவி தெய்வக்கனி பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் அண்ணாத்துரை மாயமானதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 6 மாதம் ஆகியும் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் அண்ணாத்துரை மனைவி தெய்வக்கனி தனது குழந்தைகள் கனிஷ்கா, நவீன் செல்வராஜ் மற்றும் உறவினர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்ததை நடத்தி, கலெக்டரை பார்த்து மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
தொடர்ந்து தெய்வக்கனி மற்றும் அவரது உறவினர்கள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், “மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றும் எனது கணவர் மாயமாகி 6 மாதங்கள் ஆகிறது. அவர் என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. அவருடைய சம்பளத்தையும் நிறுத்தி விட்டனர். நானும், எனது குழந்தைகளும் மிகவும் சிரமப்படுகிறோம். ஆகையால் காணாமல் போன எனது கணவரை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story