வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், வெளிநாட்டு நிறுவன உணவு பொருட்களை எரித்து ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வெளிநாட்டு நிறுவன உணவு பொருட்களை எரித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் த.வெள்ளையன் பங்கேற்றார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டையும், ஆன்லைன் வர்த்தகத்தையும் அனுமதித்த மத்திய அரசை கண்டித்தும், வெளிநாட்டு நிறுவன தயாரிப்புகளை புறக்கணிக்க கோரியும் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு கோவிந்தராஜன், பொருளாளர் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் த. வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது வெளிநாட்டு நிறுவன தயாரிப்புகளை கடைகளில் விற்பனை செய்யாமல் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியதுடன் வெளிநாட்டு நிறுவன உணவு பொருட்கள் பாக்கெட்டுகள் மற்றும் குளிர்பான பாட்டில்களை ரோட்டில் கொட்டி தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பர்னிச்சர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சங்கத்தின் தலைவர் ரத்னா மனோகர், திருப்பூர் வியாபாரிகள் நல சங்கம், வணிகர் சங்க நிர்வாகிகள் என மாவட்டம் முழுவதும் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்காமல் புறக்கணிப்போம், சில்லரை வணிகத்தை காப்போம் என்ற பிரசாரத்தை கடந்த 1-ந் தேதி தொடங்கினோம். வருகிற 6-ந் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளோம்.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ந்து பிரசாரம் நடைபெறும். வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறும் வரை பிரசாரம் தொடரும். ஆன்லைன் வர்த்தகம் மூலமாக வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைந்ததால் உள்நாட்டு சில்லரை வணிகம் அழிவை நோக்கி சென்று வருகிறது.
வியாபாரிகள் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி வியாபாரம் செய்யாமல் புறக்கணிக்க வேண்டும். பொதுமக்களும் இந்திய தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறோம். உணவு தானியங்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் போட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் உணவு தானியங்களை சாக்கு மூடையில் வைத்து விற்பனை செய்தால் விரைவில் பூச்சி, வண்டு தாக்குதல் ஏற்படும்.
அப்போது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் வணிகர்கள் மீது நடவடிக்கை பாயும். மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்திருப்பது தவறான செயலாகும். தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் தடை என்பது சில்லரை வணிகத்தை அழிக்கும் செயலாகும். தமிழக அரசு பிளாஸ்டிக் தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story