பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: வியாபாரிகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம்


பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: வியாபாரிகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:15 PM GMT (Updated: 2 Jan 2019 11:02 PM GMT)

பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாஸ்டிக் பை வியாபாரிகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை தொடங்கினர்.

நெல்லை, 

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்ட பிளாஸ்டிக் பை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் நேற்று தொடங்கியது.

மாவட்டம் முழுவதும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. மாநகர பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நெல்லை டவுன் ரத வீதிகளில் உள்ள பிளாஸ்டிக் பை மொத்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

கடைகள் முன்பு பிளாஸ்டிக் பை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சேக் பரீத், வீரமுத்து, பிஸ்மி காஜா, சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் கூறும் போது, “பிளாஸ்டிக் பை தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும். பெரிய வியாபாரிகள் முதல் சிறிய வியாபாரிகள் வரை இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலை நம்பி வியாபாரிகள் வங்கிகளில் கடன் வாங்கி இருக்கிறார்கள். அந்த கடனை எப்படி திருப்பி செலுத்த முடியும்.

பிளாஸ்டிக் தடையால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். தமிழக அரசு பிளாஸ்டிக் தடையை திரும்ப பெற வேண்டும். அப்படியில்லையென்றால், 7 மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என்றனர்.

Next Story