ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு மூலம் நாடாளுமன்ற தேர்தலில் சோனியா, ராகுலை ஓரம் கட்ட முயற்சி பா.ஜனதா மீது சிவசேனா குற்றச்சாட்டு


ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு மூலம் நாடாளுமன்ற தேர்தலில் சோனியா, ராகுலை ஓரம் கட்ட முயற்சி பா.ஜனதா மீது சிவசேனா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 Jan 2019 4:40 AM IST (Updated: 3 Jan 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு மூலம் நாடாளுமன்ற தேர்தலில் சோனியா, ராகுலை ஓரம்கட்டும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபடுவதாக சிவசேனா குற்றஞ்சாட்டி உள்ளது.

மும்பை,

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு மூலம் நாடாளுமன்ற தேர்தலில் சோனியா, ராகுலை ஓரம்கட்டும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபடுவதாக சிவசேனா குற்றஞ்சாட்டி உள்ளது.

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு

மத்தியில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 கோடிக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பான பேரத்தில் நடந்துள்ள ஊழல் குற்றச்சாட்டில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் போது அவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பெயரை குறிப்பிட்டதாக கூறப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிவசேனா குற்றச்சாட்டு

இந்த நிலையில் கூட்டணி கட்சியான பா.ஜனதா மற்றும் மத்திய அரசை, சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கடுமையாக விமர்சித்து உள்ளது.

இதுகுறித்து அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

5 மாநில இடைத்தேர்தல் நடந்தபோது இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை மத்திய அரசு துபாயில் இருந்து நாடு கடத்தி வந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி, கிறிஸ்டியன் மைக்கேலை பற்றி பேசினார். அவர் எதற்காக அப்படி பேசினார் என்பது தற்போது புரிகிறது. ஆனாலும் 5 மாநில தேர்தல் தோல்வி மூலம் இடைத்தரகர் பிரச்சினையில் பா.ஜனதா தனது வாலில் தீ வைத்து கொண்ட கதையாகி விட்டது.

ஓரம்கட்ட முயற்சி

தற்போது நாடாளுமன்ற தேர்தலின் போது சோனியா காந்தி, ராகுல்காந்தியை மக்களிடம் இருந்து ஓரம் கட்டவும், பா.ஜனதா அரசின் ரபேல் போர் விமான ஊழலை மறைக்கவும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு கையில் எடுக்கப்பட்டு உள்ளது. சோனியா காந்தி மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்களின் பெயரை கிறிஸ்டியன் மைக்கேல் குறிப்பிட்டு விட்டார் என்பதற்காக ரபேல் ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள். அரசின் எந்திரம் 2 முதல் 4 பேரின் காலடியில் கிடக்கிறது. அது அரசியல் எதிரிகளை வீழ்த்த தவறாக பயன்படுத்தப்படுகிறது.

பண வீக்கம், வேலைவாய்ப்பு இன்மை, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, விவசாயிகள் தற்கொலை, ராமர்கோவில் பிரச்சினைகளை புறம்தள்ளி, கிறிஸ்டியன் மைக்கேல் பெயரை பயன்படுத்தி தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள்.

இவ்வாறு சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.

Next Story