சென்னிமலை பகுதியில், கடைகளில் கலெக்டர் அதிரடி சோதனை - பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


சென்னிமலை பகுதியில், கடைகளில் கலெக்டர் அதிரடி சோதனை - பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Jan 2019 4:41 AM IST (Updated: 3 Jan 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட கலெக்டர் கதிரவன் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். இதில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னிமலை,

தமிழக அரசு ஜனவரி 1-ந்தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் கடைகளில் சோதனை செய்து வருகிறார்கள். சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள பழக்கடைகள், பூக்கடைகள் மற்றும் காங்கேயம் ரோட்டில் உள்ள இறைச்சி கடைகள், டீக்கடைகள், மளிகைக்கடைகளில் நேற்று காலை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் அதிரடியாக சோதனை நடத்தினார்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கடைகளில் வைத்திருந்ததை கலெக்டர் கண்டுபிடித்தார். இதைத்தொடர்ந்து 25 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடைக்காரர்களிடம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கடைகளில் வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் கடைக்காரர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து பேரூராட்சி அலுவலர்களுக்கு விளக்கினார். இதேபோல் கவுண்டச்சிபாளையம் பகுதியில் உள்ள கடைகளிலும் கலெக்டர் சோதனை நடத்தினார். மேலும் சென்னிமலை ரோட்டில் உள்ள முத்தையன் கோவில் பகுதியில் உள்ள ஒரு கடையில் கலெக்டர் ஆய்வு செய்ததில் 2 மூட்டைகளில் தண்ணீர் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அப்போது கலெக்டர் கதிரவனுடன், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் வனிதாமணி, இளநிலை பொறியாளர் தியாகராஜன், சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன், சுகாதார மேற்பார்வையாளர் ஹக்கீம் சேட் ஆகியோர் சென்றனர்.

இதேபோல் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள மளிகைக்கடை, காய்கறிக்கடை மற்றும் இறைச்சி கடைகளில் நேற்று நகராட்சி சுகாதார அலுவலர் மணிவண்ணன், ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் சோதனையிட்டு ஆய்வு செய்தனர். மொத்தம் 20 கடைகளில் சோதனை செய்யப்பட்டது. இதில் 5 கடைகளில் மட்டும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

அந்த கடைகளில் இருந்து 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதி, ரெயில் நிலையம் பகுதி ஆகிய இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது ஒவ்வொரு கடைகளாக சென்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று பார்வையிட்டனர். இதில் மொத்தம் 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story