பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: 2-வது நாளாக அதிகாரிகள் சோதனை
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க நெல்லை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக அதிகாரிகள் சோதனை செய்தனர்.
நெல்லை,
தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு நேற்று முன்தினம் முதல் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அந்தந்த பகுதியில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் 19 பஞ்சாயத்து யூனியன்கள், 425 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் வியாபாரிகள், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.
கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை மூட்டைகளாக ஏற்றி சென்றனர். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். கிராமப்புற பகுதிகளில் 21 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை மாநகராட்சியை பொறுத்த வரையில் நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களிலும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். நேற்று 2-வது நாளாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்கள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story