விடுதியில் ராக்கிங் செய்த கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் இடைநீக்கம்


விடுதியில் ராக்கிங் செய்த கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் இடைநீக்கம்
x
தினத்தந்தி 4 Jan 2019 4:00 AM IST (Updated: 4 Jan 2019 5:52 AM IST)
t-max-icont-min-icon

விடுதியில் ராக்கிங் செய்த கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 2 பேரை இடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் கே.சித்ரா நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை,

கோவை ரேஸ்கோர்சில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 23 இளநிலை பட்டப்படிப்புகளும், 21 முதுநிலை பட்டப்படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு 4,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 200-க் கும் மேற்பட்ட பேராசிரியர் கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த கல்லூரியில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தங்கியிருந்து கல்லூரியில் படிக்கும் வகையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் விடுதிகள் உள்ளன.

விடுதி மற்றும் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளை சீனியர் மாணவ- மாணவிகள் ராக்கிங் செய்வதை தடுக்கும் வகையில் கல்லூரி முதல்வர் கே.சித்ரா தலைமையில் ராக்கிங் தடுப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன்படி இந்த குழுவில் வரலாற்றுத்துறை பேராசிரியர் எம்.செந்தூர்பாண்டியன் (ஒருங்கிணைப்பாளர்), கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் ஆர்.ஏ.ரோஸ்லின், இணை பேராசிரியர்கள் பி.இளங்கோ, எஸ்.கிரிஜா, எஸ்.சித்ரா, உதவி பேராசிரியர்கள் எஸ்.சிவஞானம், பி.விஸ்வநாதன், எஸ்.சுந்தரராஜன், இ.சேனாவரையன், ஆர்.சுனில்குமார் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் அவ்வப்போது விடுதிக்கு சென்று ராக்கிங் குறித்து மாணவ- மாணவிகளிடம் விசாரித்து வருகின்றனர். ராக்கிங் தொடர்பாக இந்த குழுவினரிடம் எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். இதுதவிர ராக்கிங் புகாரை டெல்லியில் செயல்படும் ராக்கிங் தடுப்பு கமிட்டியிடமும் தபால் மூலம் தெரிவிக்கலாம். ராக்கிங் குறித்து மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தனை கண்காணிப்புகளையும் மீறி ஒருசில சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதியில் தங்கியிருந்து கோவை அரசு கலைக்கல்லூரியில் படித்து வரும் 2 சீனியர் மாணவர்கள், அதே விடுதியில் தங்கியிருந்து அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் விழுப்புரத்தை சேர்ந்த ஒரு மாணவரிடம் ராக்கிங் செய்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மாணவர் டெல்லியில் உள்ள ராக்கிங் தடுப்பு கமிட்டிக்கு தபால் மூலம் புகார் அனுப்பியுள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி, ராக்கிங் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ராக்கிங் தடுப்பு கமிட்டி அதிகாரிகள் கோவை அரசு கலைக்கல்லூரி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினர்.

இதையடுத்து கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள ராக்கிங் தடுப்பு குழுவினர் விசாரணை நடத்தினர். அதில் கல்லூரி விடுதியில் வைத்து முதலாமாண்டு மாணவரிடம் சீனியர் மாணவர்கள் 2 பேர் ராக்கிங் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணை அறிக்கை கல்லூரி முதல்வரிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த 2 மாணவர்கள் விடுதி மற்றும் கல்லூரியில் இருந்து 1 மாதம் இடைநீக்கம் செய்யப்படுவதாக முதல்வர் கே.சித்ரா அறிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

கல்லூரியில் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் புதிதாக கல்லூரிக்குள் அடியெடுத்து வைக் கும் மாணவர்களை தங்களின் சகோதரர்களாக பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ராக்கிங் செய்யப்படுவது குறையும். ஒரு மாணவன் அல்லது மாணவி உடலுக்கு உபாதை ஏற்படும் அளவிலோ, மனதை பாதிக்கும் அளவிற்கோஆளாக் கப்பட்டால் அது ராக்கிங் ஆகும். இது சட்டப்படி குற்றமாகும். இதில் ஈடுபடுபவர்களுக்கு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். மேலும் அவர்கள் உடனடியாக கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள். இந்த கொடுமையை தடுக்க ராக்கிங் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி விடுதியில் ராக் கிங் செய்த மாணவர்களின் விவரம், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டெல்லி ராக்கிங் தடுப்பு கமிட்டிக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story