திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.3 கோடி அபராதம்


திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.3 கோடி அபராதம்
x
தினத்தந்தி 4 Jan 2019 3:15 AM IST (Updated: 3 Jan 2019 10:18 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டி களுக்கு கடந்த ஆண்டு ரூ.3 கோடியே 4 லட்சத்து 15 ஆயிரத்து 120 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், போக்குவரத்து மற்றும் விதிமீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மணல் கடத்தல், கள்ளச்சாராயம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட 39 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் சாலைவிபத்துகள் நடக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டு சாலை விபத்துக்கான காரணங்கள், விபத்துகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறை சார்பில் கடந்த ஆண்டு 273 இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையினர் சாலைகளில் வேகத்தடுப்புகள், வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு, எச்சரிக்கை பலகை போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் காவல்துறை சார்பில் 7 ஆயிரத்து 796 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது.

அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றச்செயலுக்காக கடந்த ஆண்டு 2 லட்சத்து 26 ஆயிரத்து 317 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3 கோடியே 4 லட்சத்து 15 ஆயிரத்து 120 அபராதம் விதிக்கப்பட்டு அந்த பணம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்கில் 4 ஆயிரத்து 630 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 3 ஆயிரத்து 876 ஆண்கள், 782 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மதுகடத்தல் குற்றங்களில் 7 லாரிகள், 3 வேன், 3 ஆட்டோ, 179 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 500-க்கு ஏலம் விடப்பட்டது.

கடந்த ஆண்டில் 1,311 மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 410 லாரிகள், 195 டிராக்டர்கள், 28 பொக்லைன் எந்திரங்கள், 132 மினிடெம்போக்கள், 168 மோட்டார் சைக்கிள்கள், 317 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 13 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தல் அறவே நிறுத்தப்பட்டு மணல் கடத்துவது கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story