திருவண்ணாமலையில் வாலிபர் வெட்டிக் கொலை: கூலிப்படையை சேர்ந்த மேலும் ஒருவர் கைது காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு


திருவண்ணாமலையில் வாலிபர் வெட்டிக் கொலை: கூலிப்படையை சேர்ந்த மேலும் ஒருவர் கைது காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
x
தினத்தந்தி 4 Jan 2019 4:00 AM IST (Updated: 3 Jan 2019 10:22 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கூலிப்படையை சேர்ந்த மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அனைவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது28). சென்னை நெசப்பாக்கத்தில் வேலைசெய்தபோது இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர் அவர்களது கள்ளக் காதலுக்கு தடை ஏற்பட்டது. இதற்கு காரணமான மஞ்சுளாவின் மகன் ரித்தேஷ் (10) என்பவரை நாகராஜ் கொலை செய்தார். இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார், நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்படிருந்த நாகராஜ் சமீபத்தில் ஜாமீனில் வந்து திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மாலை அவர் வேலைசெய்த கடைக்கு அருகே மர்ம கும்பலால் நாகராஜ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி உத்தரவின் பேரில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு நடத்திய விசாரணையில் நாகராஜை, மஞ்சுளா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மஞ்சுளா மற்றும் கொலையாளிகளை தேடி தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்தனர்.

இதற்கிடையில் நாகராஜ் கொலையில் தேடப்பட்டு வந்த மஞ்சுளா மற்றும் சூளைமேட்டை சேர்ந்த தினேஷ்குமார், அரும்பாக்கத்தை சேர்ந்த ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் உள்பட 5 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் சரணடைந்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் மட்டும் தலைமறைவாக இருந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தலைமறைவாக இருந்த நபர் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த சஞ்சீவி (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 5 பேரையும் இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை (சனிக்கிழமை)புழல் சிறையில் இருந்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து 2 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Next Story