சேலத்தில் பூட்டிய வீட்டில் 50 பவுன் நகை, ரூ.57 ஆயிரம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு


சேலத்தில் பூட்டிய வீட்டில் 50 பவுன் நகை, ரூ.57 ஆயிரம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Jan 2019 4:30 AM IST (Updated: 3 Jan 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பூட்டிய வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.57 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னங்குறிச்சி, 

சேலம் கோரிமேட்டை அடுத்த பிரகாசம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். சேலம் மாவட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர், சமீபத்தில் இறந்துவிட்டார். இவரது மனைவி நீலாம்பாள் (வயது 60). இவருக்கு சங்கர்பிரபு என்ற மகனும், கிருபா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சங்கர்பிரபு பெங்களூருவிலும், கிருபா மங்களூருவிலும் அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். சேலத்தில் நீலாம்பாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டில் கிட்டம்மாள் (65) என்ற மூதாட்டி வீட்டு வேலைகளை செய்து வருகிறார்.

இதனிடையே, தனது மகளை பார்ப்பதற்காக நீலாம்பாள், கடந்த மாதம் 16-ந் தேதி சேலத்தில் இருந்து மங்களுருவுக்கு புறப்பட்டு சென்றார். அதேசமயம் பெங்களூருவில் இருந்து சங்கர்பிரபு கடந்த வாரம் சேலத்திற்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், வீட்டு வேலை செய்வதற்காக கிட்டம்மாள் நேற்று மதியம் நீலாம்பாள் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூருவில் உள்ள சங்கர்பிரபுவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடனடியாக சேலத்திற்கு விரைந்து வந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசாரும் அங்கு வந்தனர். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.57 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மேலும், கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். நீலாம்பாள் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு வந்த மர்ம ஆசாமிகள், வீடு பூட்டி கிடந்த வேளையில் உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, பிரகாசம் நகர் 2-வது வீதியில் யார் வீட்டிலாவது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்றும், அவ்வாறு இருந்தால் அதில் கொள்ளையர்களின் உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூட்டிய வீட்டில் 50 பவுன் நகை, ரூ.57 ஆயிரம் கொள்ளைபோன சம்பவம் சேலம் கோரிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story