கிருஷ்ணகிரியில் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்


கிருஷ்ணகிரியில் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 Jan 2019 10:45 PM GMT (Updated: 3 Jan 2019 5:50 PM GMT)

கிருஷ்ணகிரியில் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு உதவி ஆணையர் (ஆயம்) முரளி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி பேசியதாவது:-

சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவோர் உடல் அளவிலும், மனதளவிலும் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். நாளடைவில் மரணத்தை ஏற்படுத்தும். கண்பார்வை இழக்க நேரிடும். பசியின்றி உடல் நலம் கெடும், நிரந்தர உடல் ஊனத்தை ஏற்படுத்தும்.

மேலும் நினைவாற்றல் பாதிக்கப்படும், நரம்பு தளர்ச்சி ஏற்படும், உடல் உறுப்புகள் செயலிழக்க செய்யும், குடும்ப பாசம் விடுபடும். சமூகத்தில் மதிப்பு குறையும் எனவே சாராய மற்றும் போதைப்பொருட்கள் பழக்கம் உள்ளவர்களை அதில் இருந்து விடுபட செய்து அவர்களின் உடலையும், மனதையும் காக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் அவர்களின் குடும்ப வாழ்க்கை தரமும் உயரும். போதைப் பொருட்கள் பற்றி 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி 10581 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் அறிஞர் அண்ணா கல்லூரி மாணவ, மாணவிகள் ஏந்தி சென்றார்கள். இந்த ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில், கோட்ட ஆய அலுவலர்கள் பெருமாள், தெய்வநாயகி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கலால் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story