டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதியினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
திருக்கோவிலூர் தாலுகா மணலூர்பேட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 74). இவர் நேற்று காலை தனது மனைவி ஞானத்துடன் (70) மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு வந்த இவர்கள் இருவரும் தீக்குளிக்க முடிவு செய்து திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திறந்து தங்கள் மீது ஊற்றிக்கொள்ள முயன்றனர்.
இதனை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று குப்புசாமி, ஞானம் ஆகிய இருவரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பிடுங்கினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் வீட்டின் அருகில் ஏற்கனவே டாஸ்மாக் கடை இருந்தது. அந்த கடைக்கு மது குடிக்க வருபவர்களால் எங்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தது. அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலமுறை போராட்டம் நடத்தியதன் விளைவாக அந்த டாஸ்மாக் கடை குடியிருப்புக்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டது. இருந்தபோதிலும் அந்த கடைக்கு மது குடிக்க வருபவர்கள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வந்து பிரச்சினை செய்து வருவதால் மிகவும் அச்சமாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் மீண்டும் எங்கள் பகுதியில் வேறொரு டாஸ்மாக் கடையை ஒரு வாரத்தில் திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக தெரிகிறது. இப்பகுதியில் கோவில்கள் உள்ளன. பள்ளி மாணவ- மாணவிகளும் இந்த பகுதி வழியாகத்தான் சென்று வருகின்றனர். எனவே இங்கு டாஸ்மாக் கடை வந்தால் அனைவருக்கும் பெரும் இடையூறு ஏற்படும். ஆகவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க இருப்பதை கைவிட வேண்டும். அதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று அவர்கள் இருவரையும் எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வயதான தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story