தர்மபுரியில் சாலை பாதுகாப்பு குறித்து திருநங்கைகள் விழிப்புணர்வு பிரசாரம்


தர்மபுரியில் சாலை பாதுகாப்பு குறித்து திருநங்கைகள் விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 4 Jan 2019 3:45 AM IST (Updated: 3 Jan 2019 11:43 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நகரில் சாலை பாதுகாப்பு குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் திருநங்கைகள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

சாலை பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியான குடும்பம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தர்மபுரி 4 ரோட்டில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி மற்றும் செயல்விளக்க பிரசாரம் நடைபெற்றது. தர்மபுரி ரோட்டரி சங்கம் மற்றும் மிட்டவுன் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த கலைநிகழ்ச்சியில் சென்னை ரோட்டரி சங்க தலைவர் ஜெயலதா மார்ட்டின் தலைமையில் 4 திருநங்கைகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சாலைபாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை ரோட்டரி துணை ஆளுனர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். சங்க முன்னாள் துணை ஆளுனர்கள் ஆனந்த், கண்ணன், கிருஷ்ணன், பிளாஸ்டிக் ஒழிப்பு பிரிவு தலைவர் வெங்கட்ரமணன், ரோட்டரிசங்க தலைவர் கருணாகரன், மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் கோவிந்தராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள், காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சாலைகளில் இருசக்கர வாகனங்களை ஓட்டிசெல்லும்போது கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. சாலைவிதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். போக்குவரத்து சிக்னல்களை வாகன ஓட்டிகள் மற்றும் சாலைகளில் நடந்து செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கைகள் விளக்கி கூறினார்கள்.

இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின்போது போக்குவரத்து சிக்னல் பகுதியில் நின்றிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிய திருநங்கைகள் மகிழ்ச்சியான குடும்பத்திற்கு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார்கள். இந்த குழுவினர் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story