ஆத்தூர் அருகே கார் மோதியது: திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பெண் உள்பட 2 பக்தர்கள் பலி


ஆத்தூர் அருகே கார் மோதியது: திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பெண் உள்பட 2 பக்தர்கள் பலி
x
தினத்தந்தி 4 Jan 2019 3:00 AM IST (Updated: 3 Jan 2019 11:55 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே கார் மோதிய விபத்தில், திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பெண் உள்பட 2 பக்தர்கள் பலியானார்கள். மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

ஆறுமுகநேரி, 

ஆத்தூர் அருகே கார் மோதிய விபத்தில், திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பெண் உள்பட 2 பக்தர்கள் பலியானார்கள். மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

பாதயாத்திரை பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கலிங்கப்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் 20 பேர், கடந்த 2-ந்தேதி திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

அவர்கள் நேற்று மதியம் 12.15 மணிக்கு ஆத்தூர் அருகே பழையகாயலை அடுத்த புல்லாவெளி மதிகெட்டான் ஓடை அருகில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக பாதயாத்திரை பக்தர்கள் மீது மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில், சாலையில் தூக்கி வீசப்பட்ட சுப்பையா மகன் வெற்றிவேல் (வயது 47), பாண்டி மனைவி பார்வதி (55), பழனிசாமி மகன் தங்கமாரி (45), சின்னபாண்டி மனைவி ஜெயலட்சுமி (46) ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

உடனே அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி வெற்றிவேல், பார்வதி ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கார் டிரைவர் கைது

இதுகுறித்த புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த தூத்துக்குடி அருகே குறுக்குசாலை கச்சேரி தளவாய்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்த தங்கமாரியப்பன் மகன் முத்துராஜை (27) கைது செய்தனர். முத்துராஜ், திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக, தனது நண்பரிடம் காரை வாங்கி, அதில் தனியாக சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

இறந்த வெற்றிவேல், பார்வதி ஆகியோரின் உடல்களை பார்த்து பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

பாத யாத்திரை பக்தர்கள் 2 பேர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story