தூத்துக்குடி, புதூர்பாண்டியாபுரத்தில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? கலெக்டர் நேரில் ஆய்வு
தூத்துக்குடி, புதூர்பாண்டியாபுரத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி, புதூர்பாண்டியாபுரத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தமிழக அரசு ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் முதல் 3-வது மைல் வரை உள்ள கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். கடைகள், உணவக உரிமையாளர்களிடம் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சுகுழாய்கள், தெர்மாகோல் தட்டுகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தினார். மேலும் அந்த பொருட்களுக்கு மாற்று பொருட்களாக துணிப்பைகள், வாழை இலை, மண்பாத்திரங்கள், பாக்குமர இலைத்தட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
புதூர்பாண்டியாபுரம்
இதைத்தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் தாலுகா புதூர்பாண்டியாபுரத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், பொது கழிப்பிடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
அப்போது பொது கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும். தெருக்களில் சாக்கடை நீர் சீராக செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் மாற்றுப்பொருட்களாக எவைகளை எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து கேட்டறிந்தார்.
நடவடிக்கை
அப்போது அங்கு தள்ளுவண்டியில் பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் எடுத்து வந்த பெண்களிடம், குடிநீர் சரியாக கிடைக்கிறதா? என்று கேட்டறிந்தார். மேலும் பிளாஸ்டிக் குடங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அவற்றை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
பின்னர், புதூர்பாண்டியாபுரம் மெயின் ரோட்டில் உள்ள டீக்கடை, மளிகை கடைகள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். அப்போது கடை உரிமையாளர்களிடம், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது, தாசில்தார் காளிராஜ், யூனியன் ஆணையாளர் நவநீதகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர் இசக்கியப்பன், மண்டல துணை தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் ராதா மகேஷ்வரி, ஊராட்சி செயலாளர் பழனிமுருகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story