போடூர்பள்ளம், சானமாவு பகுதியில் 60 யானைகள் அட்டகாசம் விவசாயிகள் கவலை


போடூர்பள்ளம், சானமாவு பகுதியில் 60 யானைகள் அட்டகாசம் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 3 Jan 2019 9:30 PM GMT (Updated: 3 Jan 2019 6:42 PM GMT)

உத்தனப்பள்ளி அருகே போடூர்பள்ளம் மற்றும் சானமாவு பகுதியில் 60 யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ராயக்கோட்டை, 

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவில் இருந்து 200-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் வந்துள்ளன. இவை தேன்கனிக்கோட்டை, நொகனூர், மரக்கட்டா, ஜவளகிரி, ஊடேதுர்க்கம், சானமாவு, போடூர்பள்ளம் காடுகளில் பல குழுக்களாக முகாமிட்டுள்ளன. பகலில் காட்டிற்குள் இருக்கும் யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் சென்று விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்த 60 யானைகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கெலமங்கலம், ஜக்கேரி, சினிகிரிப்பள்ளி வழியாக சானமாவு காட்டிற்கு வந்தன. இவை அருகில் உள்ள பீர்ஜேப்பள்ளி, உத்தனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பயிர்களை நாசம் செய்தன.

அதில் 15 யானைகள் போடூர்பள்ளம் காட்டிற்கு சென்றன. நேற்று மாலை போடூர்பள்ளம் காட்டில் 15 யானைகளும், 45 யானைகள் சானமாவு காட்டிலும் இருந்தன. இந்த யானைகள் அடிக்கடி ஓசூர் - ராயக்கோட்டை சாலையை கடந்து செல்கின்றன. இதனால் வனத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

தற்போது சானமாவு மற்றும் போடூர்பள்ளம் காட்டில் முகாமிட்டுள்ள 60 யானைகளையும் ஒன்றாக சேர்த்து, ஊடேதுர்க்கம், ஜக்கேரி, ஜவளகிரி வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு மீண்டும் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும் உத்தனப்பள்ளி அருகே ராயக்கோட்டை சாலையை அடிக்கடி யானைகள் கடந்த வண்ணம் உள்ளதால் அங்கு ஓசூர் வனச்சரகர் சீதாராமன் தலைமையில் வனவர் ஜெயராஜ் மற்றும் வனக்குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.

யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்வதால் உத்தனப்பள்ளி சுற்று வட்டார பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த யானைகளை கர்நாடகா வனப்பகுதிக்கு விரட்டிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story