அமெரிக்க வாலிபர் விவகாரம்: மேலும் சிலரை விசாரிக்க தூத்துக்குடி போலீசார் முடிவு


அமெரிக்க வாலிபர் விவகாரம்: மேலும் சிலரை விசாரிக்க தூத்துக்குடி போலீசார் முடிவு
x
தினத்தந்தி 4 Jan 2019 3:15 AM IST (Updated: 4 Jan 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடிக்கு வந்த அமெரிக்க வாலிபர் விவகாரத்தில் மேலும் சிலரை விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடிக்கு வந்த அமெரிக்க வாலிபர் விவகாரத்தில் மேலும் சிலரை விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

அமெரிக்க வாலிபர்

அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா ஓக்லாந்தை சேர்ந்த மார்க் சியல்லா (வயது 35) கடந்த 27-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்தார். அவர் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை சந்தித்து பேசினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையிலான போலீசார் அமெரிக்க வாலிபர் மார்க் சியல்லாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சுற்றுலா விசாவில் வந்த அவர் விசா விதிமுறை மீறலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசா ரத்து செய்யப்பட்டு, அவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

எதிர்ப்பாளர்களிடம் விசாரணை

மேலும், அமெரிக்க வாலிபரை சந்தித்து பேசியதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பாத்திமா பாபு, ராஜா, ரீகன், பிரின்ஸ் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி அவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரானார்கள். இதில் பாத்திமா பாபு, ராஜா, பிரின்ஸ் ஆகிய 3 பேரிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. காலதாமதம் ஏற்பட்டதால் ரீகனிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொருவரிடமும் சுமார் 50-க் கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் அளித்த தகவல்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் சிலரிடம்...

அதே போன்று, அமெரிக்க வாலிபர் தூத்துக்குடி வந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மற்றும் வெளியூர்களில் உள்ள மேலும் சிலரை விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்ப இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story