புளியங்குடியில் துணிகரம் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் 27 பவுன் நகை கொள்ளை வாலிபரிடம் போலீசார் விசாரணை


புளியங்குடியில் துணிகரம் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் 27 பவுன் நகை கொள்ளை வாலிபரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Jan 2019 3:00 AM IST (Updated: 4 Jan 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் 27 பவுன் நகைகளை வாலிபர் ஒருவர் கொள்ளை அடித்து சென்றார்.

புளியங்குடி, 

புளியங்குடியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் 27 பவுன் நகைகளை வாலிபர் ஒருவர் கொள்ளை அடித்து சென்றார். இதுகுறித்து வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற மின்வாரியத்துறை ஊழியர்

புளியங்குடி டி.என். புதுக்குடி பிச்சாண்டி கீழத்தெருவை சேர்ந்தவர் சங்கிலியாண்டி (வயது 65). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவருடைய மனைவி நாகம்மாள் (60). இவர் தங்க நகைகளை உணவு வைக்கும் ஹாட் பாக்சில் வைத்து, அதனை பீரோவுக்கு அடியில் மறைத்து வைத்திருந்தார். சம்பவத்தன்று சங்கிலியாண்டி வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறையில் இருந்தார். நாகம்மாள் சமையல் செய்து கொண்டிருந்தார்.

27 பவுன் நகை திருட்டு

அப்போது வாலிபர் ஒருவர் நைசாக வீட்டின் உள்ளே நுழைந்து, ஹாட் பாக்சில் வைத்திருந்த 27 பவுன் நகைகளை திருடி கொண்டிருந்தார். அப்போது சத்தம் கேட்டு நாகம்மாள் சமையல் அறைக்குள் இருந்து வந்தார். உடனே அந்த மர்ம நபர் 27 பவுன் நகைகளை கொள்ளை அடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சங்கிலியாண்டி புளியங்குடி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார்(28) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story