செங்கோட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செல்போனில் பேசியதை கள்ளக்காதலன் கண்டித்ததால் பரிதாப முடிவு


செங்கோட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செல்போனில் பேசியதை கள்ளக்காதலன் கண்டித்ததால் பரிதாப முடிவு
x
தினத்தந்தி 4 Jan 2019 3:00 AM IST (Updated: 4 Jan 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே செல்போனில் அடிக்கடி பேசியதை கள்ளக்காதலன் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி, 

செங்கோட்டை அருகே செல்போனில் அடிக்கடி பேசியதை கள்ளக்காதலன் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்காதல்

நெல்லை மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவருக்கும், கடையநல்லூர் அருகே உள்ள சுந்தரேசபுரத்தை சேர்ந்த கவிதாவுக்கும் (28) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 1 வயதில் மகனும் உள்ளனர். மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கவிதாவுக்கும் செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர், சொசைட்டி தெருவை சேர்ந்த தொழிலாளி சோமு (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். அக்கம் பக்கத்தினருக்கு இந்த விபரம் தெரிய வந்தநிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவர் வீட்டில் இருந்து வெளியேறிய கவிதா சோமுவுடன் சென்றார். பின்னர் இருவரும் இலத்தூரில் உள்ள சோமுவின் வீட்டில் வசித்து வந்தனர். மணிகண்டன் பெற்றோர் மற்றும் ஊர் பெரியவர்கள் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கவிதாவை கள்ளக்காதலன் வீட்டில் இருந்து அழைத்து வந்தனர்.

சில நாட்கள் கணவர் வீட்டில் இருந்து கவிதா மீண்டும் குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு சோமுவுடன் சென்று வசித்து வந்தார். இதுகுறித்து அறிந்த மணிகண்டன், இனி கவிதாவை வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம் என கூறிவிட்டாராம்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்நிலையில் சோமுவுடன் வசித்து வந்த கவிதா அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதை சோமு கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வேலைக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட கவிதா வீட்டில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய சோமு, அவர் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி உள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து இலத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளஸ்வரி மற்றும் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவரை பிரிந்து கள்ளக்காதலன் வீட்டில் வசித்து வந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தென்காசி உதவி கலெக்டர் சவுந்தர்ராஜ் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story