மாவட்டத்தில் கடந்த ஆண்டு 581 மி.மீட்டர் மழை பதிவு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 581 மி.மீட்டர் மட்டுமே மழை பெய்து உள்ளது. இதனால் வருகிற கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு மழை அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கடும் வறட்சி நிலவி வருகிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வறண்டு கிடப்பதால், கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிவடைந்து உள்ளது.
இதனால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளை தவிர மற்ற பகுதிகள் அனைத்திலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்று விட்டதால், பல இடங்களில் தற்போதே தண்ணீருக்கு பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.
மாவட்டத்திலேயே பெரிய ஏரியான தூசூர் ஏரி வறண்டு கிடப்பதால் நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பான மழை அளவு 900 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் 2001-ம் ஆண்டுக்கு பிறகு 2 ஆண்டுகள் மட்டுமே இயல்பான அளவை காட்டிலும் அதிக மழை பொழிவு கிடைத்து உள்ளது. மீதமுள்ள ஆண்டுகளில் மிக குறைவான அளவே மழை பெய்து உள்ளது.
இந்த மாவட்டம் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை மூலம் தலா 350 மி.மீட்டர் மழையையும், கோடை காலத்தில் 200 மி.மீட்டர் மழையையும் என மொத்தம் 900 மி.மீட்டர் மழையை பெற்று வந்தது. ஆனால் கடந்த ஆண்டு 581 மி.மீட்டர் மட்டுமே மழை பெய்து உள்ளது. இது இயல்பான அளவை காட்டிலும் 319 மி.மீட்டர் குறைவு ஆகும்.
இது குறித்து வானிலை ஆராய்ச்சி மைய பேராசிரியர் டாக்டர் நடராஜன் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு குளிர் காலத்தில் 8 மி.மீட்டர், கோடை காலத்தில் 94 மி.மீட்டர், தென்மேற்கு பருவமழை காலத்தில் 295.7 மி.மீட்டர், வடகிழக்கு பருவமழை காலத்தில் 183.6 மி.மீட்டர் மழை என மொத்தம் 581.3 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. இயல்பான மழை அளவை காட்டிலும் 35.5 சதவீதம் குறைவாக மழை பெய்து உள்ளது. அதிலும் வடகிழக்கு பருவமழை 52.5 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டில் பருவமழை இயல்பான அளவை காட்டிலும் மிகவும் குறைந்து உள்ளதால், இந்த ஆண்டு கோடை காலத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
Related Tags :
Next Story