அம்பை அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு மர்மநபருக்கு வலைவீச்சு


அம்பை அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு மர்மநபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Jan 2019 3:00 AM IST (Updated: 4 Jan 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

அம்பை அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அம்பை, 

அம்பை அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் ஆத்தியடி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). இவர், அம்பை-தென்காசி சாலையில் மன்னார்கோவில் விலக்கு அருகே பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் அவர், பெட்ரோல் பங்க்கில் இருந்து காரில் புறப்பட்டார். அம்பை ரெயில்வே கேட் அருகில் உள்ள கடை முன்பு காரை நிறுத்தி விட்டு டீக்குடிப்பதற்காக, கீழே இறங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அரிவாளுடன் அவரை நோக்கி ஓடிவந்தார்.

அரிவாள் வெட்டு

மர்ம நபரை பார்த்தவுடன் ஆறுமுகம் சுதாரிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர் அரிவாளால் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தலை, கழுத்து, வயிறு பகுதியில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த உடன் மர்ம நபர் அரிவாளை அங்கேயே போட்டுவிட்டு இருளில் ஓடி தப்பி சென்று விட்டார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரணம் என்ன?

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மர்ம நபர் விட்டு சென்ற அரிவாளை கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதத்தில் அவர் வெட்டப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story