திருச்செங்கோடு அருகே பொதுமக்கள் திடீர் சாலைமறியல் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க கோரிக்கை
திருச்செங்கோடு அருகே, சட்ட விரோத மது விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
எலச்சிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது பெரியமணலி ஜேடர்பாளையம். இந்த பகுதியில் பெரிய மணலி பகுதியை சேர்ந்த 2 பேர் சட்டவிரோதமாக குடிசை போட்டு மது விற்பனை மற்றும் பார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் மற்றொரு பார் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனை பொதுமக்கள் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் மதுபிரியர்கள் சட்ட விரோத பார் அமைந்துள்ள குடிசைக்குள் சென்று மது குடித்து விட்டு வருவது அக்கம், பக்கத்தில் உள்ள பொது மக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த ஊரைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணி என்பவர் அங்கு சென்று மது விற்பனை செய்வது குறித்து தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது பாரை நடத்தி வந்தவர்கள் சுப்பிரமணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சுப்பிரமணியை தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சட்டவிரோதமாக செயல்படும் பாரை அகற்றி மது விற்பனையை தடுக்க கோரி அப்பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு வந்த எலச்சிபாளையம் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சட்ட விரோதமாக இயங்கி வரும் மதுபான பாரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story