பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க மாவட்டம் முழுவதும் 3-வது நாளாக சோதனை
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க மாவட்டம் முழுவதும் கடைகளில் 3-வது நாளாக நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
தேனி,
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தமிழக அரசு தடை செய்துள்ளது. இந்த உத்தரவு கடந்த 1-ந்தேதியில் இருந்து அமலுக்கு வந்தது. இந்த தடை உத்தரவை அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுப்பதற்காக 65 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களில் உள்ளாட்சி துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் இடம் பிடித்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் இந்த கண்காணிப்பு குழுவினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல் நாளில் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் 699 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ரூ.39 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடத்திய சோதனையில் 389 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ரூ.21 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
3-வது நாளாக நேற்றும் சோதனை நடந்தது. அதில் சின்னமனூர் நகராட்சி ஆணையர் கமலா தலைமையில் சுகாதார அலுவலர் ஜெயராமன் மற்றும் சுகாதார ஆய்வாளர் செந்தில் ராம்குமார் ஆகியோர் சின்னமனூரில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சோதனை செய்தனர். அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் 500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உத்தமபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணி, சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் ஊழியர்கள் போலீசாருடன் சென்று கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது 10 கடைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 20 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுமார் 700 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறுகையில், ‘இதுபோன்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, வைத்திருந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும். உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல் அவற்றை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய இயலும். எனவே, அனைத்து தரப்பினரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story