வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது பெங்களூருவில் திருவள்ளுவர் தின விழா முதல்-மந்திரி குமாரசாமி பங்கேற்பு


வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது பெங்களூருவில் திருவள்ளுவர் தின விழா முதல்-மந்திரி குமாரசாமி பங்கேற்பு
x
தினத்தந்தி 4 Jan 2019 3:30 AM IST (Updated: 4 Jan 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வருகிற 15-ந் தேதி திருவள்ளுவர் தின விழா நடக்கிறது என்றும், இதில் முதல்-மந்திரி குமாரசாமி பங்கேற்க இருப்பதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம் கூறினார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் வருகிற 15-ந் தேதி திருவள்ளுவர் தின விழா நடக்கிறது என்றும், இதில் முதல்-மந்திரி குமாரசாமி பங்கேற்க இருப்பதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம் கூறினார்.

திருவள்ளுவர் தின விழா

கர்நாடக காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வருகிற 15-ந் தேதி திருவள்ளுவர் தின விழா நடத்த முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் அல்சூர் ஏரிக் கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்-மந்திரி குமாரசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பரமேஸ்வர்- தேவேகவுடா

இந்த விழா எனது(எஸ்.எஸ்.பிரகாசம்) தலைமையில் நடக்கிறது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், பிரசார குழு தலைவர் எச்.கே.பட்டீல், மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ஜமீர்அகமதுகான், எச்.டி.ரேவண்ணா, டி.சி.தம்மண்ணா, கிருஷ்ண பைரேகவுடா, எம்.டி.பி.நாகராஜ், மேயர் கங்காம்பிகே, முன்னாள் மேயர் சம்பத்ராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

முன்னாள் மந்திரிகள் ரோஷன் பெய்க், ராமலிங்கரெட்டி, புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, நடிகர் செந்தில், நடிகை ராதிகா, கர்நாடக மாநில அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.டி.குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகி ராமசாமி, டி.டி.வி.தினகரன் அணியினர், டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி., சாய் ஜூவல்ஸ் பேலஸ் செந்தில், நடிகர்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரும் கலந்து கொள் கிறார்கள்.

ரவிசங்கர் குருஜி

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், தெலுங்கானா எதிர்க்கட்சி தலைவர் சுதாகர்ரெட்டி, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி, ஆனந்த் குருஜி உள்ளிட்டோருக்கும் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். அனைத்துக்கட்சிகளை சேர்ந்தவர் களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், தமிழ் கவுன்சிலர்களும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். கர்நாடகத்தில் பெங்களூரு, கோலார், சிவமொக்கா, மங்களூரு, ராமநகர், பத்ராவதி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் சுமார் 60 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். இதில் பெங்களூருவில் மட்டும் 40 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். இந்த விழாவை வெற்றி பெற செய்ய தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

திருவள்ளுவர் விருது

இந்த விழாவில் தினேஷ் குண்டுராவ், மந்திரி கே.ஜே.ஜார்ஜ், எம்.எல்.ஏ.க்கள் ரோஷன் பெய்க், ராமலிங்கரெட்டி, என்.ஏ.ஹாரீஷ், அகண்ட சீனிவாசமூர்த்தி, டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி. ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது.

தமிழர்களின் நலனுக்காக பாடுபட தமிழர்களில் ஒருவர் தலைவராக உருவாக வேண்டும். அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சரி. எம்.எல்.ஏ., எம்.பி.யாக வர வேண்டும். அதற்கு தமிழர்கள் இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். ஒற்றுமை இருந்தால், கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

இவ்வாறு எஸ்.எஸ்.பிரகாசம் கூறினார்.

இந்த பேட்டியின்போது, காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே உடன் இருந்தார்.

Next Story