தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய இலங்கை படகு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா?


தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய இலங்கை படகு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா?
x
தினத்தந்தி 4 Jan 2019 4:30 AM IST (Updated: 4 Jan 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி அருகே கடற்கரையில் இலங்கை படகு கரை ஒதுங்கியது. அது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி சேராங்கோட்டை-கோதண்டராமர் கோவிலுக்கு இடையே வடக்கு கடற்கரையில் பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக ‘கியூ’ பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ராஜேசுவரி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தனமாரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அங்கு கரை ஒதுங்கி கிடந்தது இலங்கையை சேர்ந்த படகு என தெரியவந்தது. அந்த படகு 21 அடி நீளம் கொண்டதாகவும், பச்சை மற்றும் வெள்ளை நிறத்திலும் காணப்பட்டது. அதில் ‘2196 எம்.என்.ஆர்.’ என்று எழுதப்பட்டு இருந்தது. அதில் 25 குதிரைத்திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பின்னர் அந்த படகை போலீசார் சோதனையிட்டபோது, அதில் ஒரு கேனில் 20 லிட்டர் மண்எண்ணெய், மற்றொரு கேனில் 2 லிட்டர் பெட்ரோல், நங்கூரம், வலை உள்ளிட்டவை இருந்தன.

இந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த சுங்க இலாகாவினர், அந்த படகை கைப்பற்றி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அந்த படகில் வந்தவர்கள் யார்? இந்த படகு இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு ஏதேனும் பொருட்களை கடத்தி வர பயன்படுத்தப்பட்டதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே இலங்கை மன்னார் போலீஸ் நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த மீனவர் சங்க தலைவர் ஆலம் என்பவர், “2 நபருடன் ஒரு படகை காணவில்லை” என்று புகார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. எனவே அந்த படகுதான் ராமேசுவரத்தில் கரை ஒதுங்கி உள்ளதா? அப்படி என்றால் அதில் வந்த 2 பேர் என்ன ஆனார்கள்? என்பது பற்றியும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

Next Story