100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் விவசாய சங்க தலைவர் அரசுக்கு வலியுறுத்தல்


100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் விவசாய சங்க தலைவர் அரசுக்கு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Jan 2019 3:30 AM IST (Updated: 4 Jan 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட் டத்தை விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராம கவுண்டர் வலியுறுத்தினார்.

விருதுநகர், 

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் அமெரிக்க படைப்புழுக்களால் மக்காச்சோள பயிர் சாகுபடி பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மக்காச்சோள விதைகளை வினியோகம் செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 50 சதவீதம் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் வறட்சியால் பாதிப்பு அடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு தொகை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வயது முதிர்ந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டம் முழுவதும் தாமிரபரணி தண்ணீர் கிடைக்கும் வகையில் கூடுதல் தாமிரபரணி குடிநீர் திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். வன விலங்குகளால் பயிர்கள் சேதம் ஏற்பட்டு பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனை தடுக்க விவசாயிகளுக்கு அரசு துப்பாக்கி வழங்குவதுடன், சுடுவதற்கான உரிமமும் வழங்க வேண்டும்.

50 ஆண்டுகளாக வனப் பகுதி மற்றும் நத்தம் நிலங்களில் குடியிருக்கும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். கண்மாய்கள் மற்றும் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே கண்மாய் மற்றும் வரத்து கால்வாய்களை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


மேற்காண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இம்மாதம் 23-ந்தேதி அனைத்து கலெக்டர் அலுவலகம் முன்பும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story