அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை கலெக்டர் ரோகிணி பேட்டி
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகளுக்கு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் ரங்கநாதன் வரவேற்றார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சிவனேசன் கலந்து கொண்டு தொழில் தொடங்குவது குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த முகாமில் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் கலெக்டர் ரோகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடுகள் தோறும் ஆசிரியர்கள் சென்று பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவ-மாணவிகளை பள்ளிகளுக்கு அழைத்து வருகின்றனர்.
அதேபோல், அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், மலைவாழ் மக்கள் வாழ்கின்ற கிராமங்களிலும், இதர ஒருசில இடங்களிலும் குறைவான எண்ணிக்கைகளில் மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களின் நலனுக்காக தொடர்ந்து அந்த பகுதிகளில் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசு பள்ளிகளின் விவரத்தை அரசு கேட்டுள்ளது. அந்த விவரம் எடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் பெரும்பாலானவை மலைவாழ் மக்கள் வாழும் பகுதியாக அமைந்திருக்கிறது. அந்த பள்ளிகளை மூட அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அங்கு சிறப்பு சலுகை வழங்க கேட்டிருக்கிறோம். இருப்பினும், பள்ளிகளை மூடும்படி உத்தரவு வந்தால், மாணவ-மாணவிகளுக்கு எந்த ஒரு சிரமமும் வராத வகையில் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.
Related Tags :
Next Story