புத்தாண்டையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.7¾ கோடிக்கு மது விற்பனை


புத்தாண்டையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.7¾ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 4 Jan 2019 3:45 AM IST (Updated: 4 Jan 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.7¾ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு, 

2019-ம் ஆண்டு பிறப்பை பொதுமக்கள் பலரும் உற்சாகமாக வரவேற்றனர். இனிப்புகளை வழங்கி பலரும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதேபோல் கேக் வெட்டியும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இளைஞர்களில் பலர் நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதிலும் ஆர்வத்தை வெளிக்காட்டி இருந்தனர். இதனால் மது விற்பனையும் வழக்கத்தைவிட அதிகமானது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 31-ந் தேதியும், 1-ந் தேதியும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக இருந்தது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. கடந்த ஆண்டைவிட இந்த புத்தாண்டில் மது விற்பனை அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரங்கநாதன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 31-ந் தேதி ரூ.3 கோடியே 41 லட்சத்துக்கும், 1-ந் தேதி ரூ.4 கோடியே 35 லட்சத்துக்கும் என மொத்தம் புத்தாண்டையொட்டி ரூ.7 கோடியே 76 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.30 லட்சத்துக்கும் கூடுதலாகவே மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

மேலும் 1-ந் தேதியில் இருந்து பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், உணவு பொருட்களை வைக்கும் பிளாஸ்டிக் தட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பார் பணியாளர்களும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து உள்ளனர்.

டாஸ்மாக் பார்களில் கண்ணாடி டம்ளர்கள் வழங்கப்படுகிறது. மதுபிரியர்களும் அதை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா? என்று டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழுவுக்கு 3 பேர் வீதம் 6 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் பல்வேறு டாஸ்மாக் கடைகளுக்கு சென்று சோதனையிட்டு உள்ளனர். இதுவரை பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story