அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அமைதியாக நடத்த பரிந்துரைகள் வக்கீல்கள் தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அமைதியாக நடத்த பரிந்துரைகள் வக்கீல்கள் தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Jan 2019 4:41 AM IST (Updated: 4 Jan 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அமைதியாக நடத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை வக்கீல்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த கண்ணன் உள்பட பலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டும் பொங்கல் தினத்தன்று (வருகிற 15-ந்தேதி) ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு உள்ளோம். இதற்கு அனுமதியும், தேவையான போலீஸ் பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும்‘ என கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தங்களையும் மனுதாரர்களாக சேர்க்கக்கோரி சிலர் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், ‘அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளவர் கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருந்து வருகிறார். ஜல்லிக்கட்டு விழா செலவு, கணக்குகளை முறையாக மாவட்ட நிர்வாகத்திடம் அவர் சமர்ப்பிப்பது இல்லை. விழா தொடர்பாக யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுக்கிறார்.

இதே நிலை தொடர்ந்தால் ஜல்லிக்கட்டு விழாவை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் ஆர்வமும், பங்கெடுப்பும் குறையும். எனவே அனைத்து சமுதாயத்தினரின் பங்களிப்புடன் கூடிய குழுவை அமைத்து அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும்‘ என கூறியிருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, “மாவட்ட கலெக்டரே ஜல்லிக்கட்டு விழா குழுவின் தலைவராக இருந்து அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைத்து விழாவை நடத்தலாமே“ என கருத்து தெரிவித்தார்.

பின்னர் இது தொடர்பாகவும், ஜல்லிக்கட்டு விழாவை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பான பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய இருதரப்பு வக்கீல்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story