கிளி ஜோதிடர் கொலை வழக்கில் சரண் அடைந்த தனியார் நிறுவன ஊழியரை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை
திருப்பூரில் நடந்த கிளி ஜோதிடர் கொலை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த தனியார் நிறுவன ஊழியரை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்,
திருப்பூரை அடுத்த மங்கலம் பாரதி புதூரை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமார் (வயது 35). இவர் திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா நுழைவாயில் அருகே அமர்ந்து கிளி ஜோதிடம் பார்த்து வந்தார். கடந்த 24-ந் தேதி பென்னி காம்பவுண்ட் பகுதியில் உள்ள ரோட்டில் வைத்து பட்டப்பகலில் மர்ம நபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து மர்ம ஆசாமியை தேடிவந்தனர். விசாரணையில், ரமேசை, நாகப்பட்டினம் அருகே குத்தாலம் பகுதியை சேர்ந்த ரகு(47) என்பவர் கொலை செய்ததும், இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்ததும், கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் ரகு, சென்னை அம்பத்தூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் கோர்ட்டு அனுமதியுடன் ரகுவை திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1-ல் மாஜிஸ்திரேட்டு கவியரசு முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து கொலை வழக்கு தொடர்பாக ரகுவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் கடந்த 28-ந் தேதி வடக்கு போலீசார் மனு செய்தனர்.
இந்தநிலையில் அந்த மனு மீதான விசாரணை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1-ல் நேற்று விசாரணைக்கு வந்தது. ரகுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். வருகிற 6-ந் தேதி வரை 3 நாட்கள் ரகுவை காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு கவியரசன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு ரகுவை அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பிறகே ஜோதிடர் கொலை வழக்கில் முக்கிய தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story