மதுரையில் பரபரப்பு 9 வயது சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவர் கைது


மதுரையில் பரபரப்பு 9 வயது சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவர் கைது
x
தினத்தந்தி 3 Jan 2019 11:18 PM GMT (Updated: 3 Jan 2019 11:18 PM GMT)

மதுரையில் 9 வயது சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார். மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி ராஜலட்சுமி (வயது 35). இவர்களுக்கு ஹரிணி (9), பிரியங்காதேவி (5) என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பும், இளைய மகள் யு.கே.ஜி.யும் படித்து வருகின்றனர். இவர்கள் சந்தோஷ்ராஜ் (25) என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர்.

சில மாதங்களாக கணேஷ்குமார் வீட்டு வாடகையை சரிவர கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. எனவே வீட்டை காலி செய்யுமாறு சந்தோஷ்ராஜ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சந்தோஷ்ராஜ் அந்த வீட்டின் மாடிக்கு சென்ற போது, அங்கு சிறுமி ஹரிணி தனியாக விளையாடி கொண்டிருந்ததை கண்டார்.

கணேஷ்குமார் குடும்பத்தினர் வீட்டை காலி செய்யாத ஆத்திரத்தில் அவர் அருகில் கிடந்த ஒயர்களை எடுத்து, சிறுமி ஹரிணி கழுத்தில் சுற்றி கொலை செய்ய முயன்றதாகவும், அப்போது ஒயரில் மின்சப்ளை கொடுத்து ஹரிணி மீது பாய்ச்சியதாகவும் கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சிறுமியின் அலறல் கேட்டு அவளுடைய தாயார் பதறியபடி அங்கு ஓடி வந்தார். வயிறு, கையில் படுகாயத்துடன் சிறுமி ஹரிணி விழுந்து கிடந்தாள்.

உடனே அவளை சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்த தகவல் அறிந்ததும் திலகர்திடல் போலீசார், பெரிய ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் சிறுமியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் சந்தோஷ்ராஜை கைது செய்தனர்.

வீட்டு வாடகை தராத ஆத்திரத்தில் வீட்டின் உரிமையாளர் செய்த இந்த கொடூர செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story