காங்கேயத்தில் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - நகராட்சி அதிகாரிகள் அதிரடி


காங்கேயத்தில் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - நகராட்சி அதிகாரிகள் அதிரடி
x
தினத்தந்தி 4 Jan 2019 4:15 AM IST (Updated: 4 Jan 2019 5:44 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயத்தில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காங்கேயம், 

தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட பைகள், மேஜை விரிப்பு, தெர்மாகோல், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், கவர்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட 14 வகையான ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை தொடர்ந்து விற்பனையாளர்கள் மற்றும் உபயோகிப்பவர்களிடம் இருந்து ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அரசிடம் ஒப்படைப்பதற்கு காலஅவகாசமும் வழங்கப்பட்டு இருந்தது.

இதை தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் அதிகாரிகள் பிளாஸ்டிக் உபயோகம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கேயம் நகராட்சி ஆணையாளர் தேவிகா தலைமையில் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் நேற்று காங்கேயம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகள்,ஓட்டல்கள், பேக்கரிகள், மளிகை கடைகள் போன்றவற்றில் திடீர் சோதனை நடத்தினர்.

அதில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், கப்புகள் மற்றும் குடிநீர் பாக்கெட்டுகள் என சுமார் 1 டன் அளவுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும். இதை விற்பனை செய்தவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது போன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் என்றும், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். 

Next Story