திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை கண்காணிக்க 23 சிறப்பு குழுக்கள் கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை கண்காணிக்க 23 சிறப்பு குழுக்கள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-04T22:39:56+05:30)

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை கண்காணிக்க 23 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டில் உள்ள சி.எஸ்.ஐ. கவுடி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் மாசில்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி பிளாஸ்டிக் மாசில்லா திருவள்ளூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற உறுதிமொழியை வாசிக்க அதனை திரளான அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் வாசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 2 ஆயிரம் பேர் பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மாற்றிடுவோம் என்ற வாசகம் வடிவில் தரையில் அமர்ந்து வடிவமைப்பை உருவாக்கினர்.

பின்னர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5-6-2018 அன்று பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்து ஜனவரி 2019 முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்து 6 மாத காலம் அவகாசமும் அளித்தார்.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணிகளும், வியாபாரிகள், கடைக்காரர்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

தற்போது ஜனவரி மாதம் தொடங்கியுள்ள நிலையில் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க 23 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை தடை செய்யப்பட்ட 7 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது சப்-கலெக்டர் ரத்னா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கிருபானந்தராஜன், நிர்வாக அலுவலக மேலாளர் தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன், மண்டல் துணை தாசில்தார் வெங்கடேஷ், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், திரளான அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story