18 வயதுக்கு உட்பட்டவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக் கூடாது பெற்றோருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
18 வயதுக்கு உட்பட்டவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக்கூடாது என விழிப்புணர்வு கூட்டத்தில் பெற்றோருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் நண்பர்கள் குழுவின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதனையொட்டி விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம், வாகனங்களின் முகப்பில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி ஆகியவை நேற்று திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு போலீஸ் நண்பர்கள் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.தியாகுராஜ் வரவேற்றார்.
திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். வாகனங்களின் முகப்பில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா பேசியதாவது:-
சிக்னல் பகுதியில் வாகனங்களை ஓட்டும்போது தயவு செய்து செல்போனை பயன்படுத்தாதீர்கள். பேஸ்புக், ‘வாட்ஸ் அப்’ பார்த்துக் கொண்டே சாலைகளை கடக்கிறார்கள். இதனால் விபத்துகள் அதிகரிக்கிறது. மாணவ, மாணவிகள், கண் பார்வை அற்றவர்களுக்கு, முதியோர்களுக்கு சாலையை கடக்க உதவி செய்யுங்கள். ‘நோ பார்க்கிங்’கில் வண்டியை நிறுத்துவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.
பெற்றோர்கள் மிக கவனத்துடன் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளை இருசக்கர வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக் கூடாது. நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். பெற்றோர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் நற்பெயரை எடுத்துத் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிகளில் பள்ளி முதல்வர் ஹாபர்ட் தனசுந்தரம், போலீஸ் நண்பர்கள் குழு நகர துணை ஒருங்கிணைப்பாளர்கள் மூர்த்தி, த.தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story