உளுந்தூர்பேட்டை அருகே முதியவர் அடித்துக் கொலை? போலீசார் விசாரணை


உளுந்தூர்பேட்டை அருகே முதியவர் அடித்துக் கொலை? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Jan 2019 4:30 AM IST (Updated: 4 Jan 2019 10:49 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பாக்கம் காலனியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 65). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் பார்த்திபன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாமிக்கண்ணு கடையில் வாங்கிய சாப்பாட்டை தனது வீட்டில் வைத்து சாப்பிட்டு விட்டு, அந்த பேப்பரை பார்த்திபன் வீட்டின் முன்பு வீசியதாக தெரிகிறது.

இதை பார்த்த பார்த்திபன் சாமிக்கண்ணுவிடம் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன் தனது ஆதரவாளர்கள் அன்புவேல், ராசாத்தி, ராஜேஷ், சற்குணம், முருகையன், சிவராஜ் ஆகியோருடன் சேர்ந்து சாமிக்கண்ணுவை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற சாமிக்கண்ணுவின் மருமகள் அனிதா(23) என்பவரையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சாமிக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி சாமிக்கண்ணு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அனிதா, திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், எங்கள் குடும்பத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரது குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் பார்த்திபன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது மாமனாரிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். அதனால் தான் அவர் இறந்து விட்டார். எனவே பார்த்திபன் உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாமிக்கண்ணு அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story