வாடகை பாக்கி செலுத்தாத 12 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


வாடகை பாக்கி செலுத்தாத 12 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Jan 2019 4:00 AM IST (Updated: 4 Jan 2019 11:19 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் வாடகைபாக்கி செலுத்தாத 12 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

வேலூர், 


வேலூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் மாநகராட்சிக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் வாடகை செலுத்தவேண்டும் என்பது விதி. ஆனால் ஒரு சிலர் வாடகை செலுத்தாமல் வருடக்கணக்கில் பாக்கி வைத்து வருகிறார்கள்.

அவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வாடகை பாக்கி வசூல் செய்யப்படுகிறது. நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் வாடகை பாக்கியை செலுத்தியபின் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட கடைகளில் வியாபாரம் செய்துவரும் சிலர் பல மாதங்களாக வாடகை பாக்கி செலுத்தாமல் உள்ளனர். இந்த கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியும் வாடகை செலுத்தாததால் அந்த கடைகளுக்கு ‘சீல்’ வைக்கவும் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து உதவி கமிஷனர் கண்ணன் அறிவுரையின்பேரில் மாநகராட்சி சந்தை கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் பணியாளர்கள் சேகர், வேலு ஆகியோர் நேற்று சத்துவாச்சாரியில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள 2 கடைகளுக்கும், நேதாஜி மார்க்கெட்டில் உள்ள 10 கடைகளுக்கும் ‘சீல்’ வைத்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story