கூட்டாளி கொலைக்கு பழிவாங்க வெடிகுண்டு வீசினோம் ரவுடி வசூர் ராஜா வாக்குமூலம்


கூட்டாளி கொலைக்கு பழிவாங்க வெடிகுண்டு வீசினோம் ரவுடி வசூர் ராஜா வாக்குமூலம்
x
தினத்தந்தி 5 Jan 2019 3:30 AM IST (Updated: 5 Jan 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

தனது கூட்டாளியை கொலைசெய்ததால் பழிக்குப்பழி வாங்கவே வெடிகுண்டு வீசியதாக ரவுடி வசூர் ராஜா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்கிற வீச்சு தினேஷ் (வயது35). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் வீச்சுதினேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதாக அவரை சத்துவாச்சாரி போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

பின்னர் அவர் அக்டோபர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை வேலூர் மத்திய சிறையில் இருந்து அவருடைய கூட்டாளிகள் காரில் அழைத்து வந்தனர். சிறையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் 6 பேர் கொண்ட கும்பல் வீச்சுதினேஷ் வந்த காரை பின்தொடர்ந்து வந்து காரின் மீது நாட்டுவெடிகுண்டுகளை வீசினர். இதில் ஒரு குண்டு வெடித்து காரின் முன்பகுதி சேதமடைந்தது. நல்ல வேளையாக காரில் இருந்து அனைவரும் காயமின்றி உயிர்தப்பினர். குண்டு வீசிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரபல ரவுடி வசூர் ராஜா தினேஷ் மீது குண்டு வீசச்சொன்னதாக தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசூர் ராஜாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர்.

அதற்காக வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் வசூர் ராஜா சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் ஆஜர் படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட்டு அலீசியா வழக்குவிசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் பாகாயம் போலீசார் வசூர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க மனுசெய்திருந்ததை தொடர்ந்து அவரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து வசூர் ராஜாவை பாகாயம் போலீசார் அழைத்துச்சென்று வெடிகுண்டு வீசியது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அப்போது தனது கூட்டாளியான வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த பிச்சைபெருமாள் என்பவரை பாலாற்றில் வைத்து அடித்து கொலைசெய்ததால், இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக வீச்சு தினேசை கொலைசெய்ய திட்டமிட்டோம். அதற்காக தனது கூட்டாளிகள் மூலம் வீச்சு தினேஷ் கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது என ரவுடி வசூர் ராஜா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story