நெல்லையில் போலீசார் தேடுதல் வேட்டை: ரவுடிகள் உள்பட 14 பேர் அதிரடி கைது 9 நாட்டு வெடிகுண்டு-அரிவாள்கள் பறிமுதல்


நெல்லையில் போலீசார் தேடுதல் வேட்டை: ரவுடிகள் உள்பட 14 பேர் அதிரடி கைது 9 நாட்டு வெடிகுண்டு-அரிவாள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Jan 2019 10:30 PM GMT (Updated: 4 Jan 2019 6:44 PM GMT)

நெல்லையில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ரவுடிகள் உள்பட 14 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

நெல்லை, 

நெல்லையில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ரவுடிகள் உள்பட 14 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரட்டைக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள பக்கப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி முத்துச்சாமி, அவருடைய பேரன் சுடலைமணி ஆகியோரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இந்த இரட்டைக்கொலை தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இரட்டைக்கொலை நடந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் மாரிமுத்து, சின்னத்தம்பி ஆகியோர் ஆலங்குளம் கோர்ட்டில் ஏற்கனவே சரண் அடைந்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய அருண்குமார், மற்றொரு சின்னத்தம்பியை பிடிக்க தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தார்கள்.

தேடுதல் வேட்டை

இந்த நிலையில் அவர்கள், நெல்லையை அடுத்த தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளத்தில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு இளைஞர் அணி செயலாளர் கண்ணபிரான் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் உத்தரவின்பேரில், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, நெல்லை மாநகர துணை கமிஷனர் சுகுணாசிங் ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் சத்திரம்புதுக்குளம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அந்த பகுதியில் உள்ள கண்ணபிரான், எஸ்டேட் மணி ஆகியோர் வீடுகளை போலீசார் சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டையில் அதிரடியாக இறங்கினார்கள். போலீசார் உள்ளே நுழைந்ததை பார்த்ததும் அங்கு தங்கி இருந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் நாலாபுறமும் தப்பி ஓடினார்கள்.

14 பேர் கைது

இருந்தபோதும், போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் கண்ணபிரான் (வயது 40), எஸ்டேட் மணி (35), குமுளிராஜ்குமார் (38), அருண், செல்லப்பாண்டி, கணேசன், விஜி, ஆறுமுகம், ராஜதுரை உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் பலரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள மேலும் சில வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது வீடுகளில் மறைவிடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஏராளமான அரிவாள்களும், நாட்டு வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆயுதங்கள் பறிமுதல்

அங்கு ஒரு சொகுசு கார் உள்பட 2 கார்கள் நின்றன. அந்த கார்களையும் போலீசார் சோதனை செய்தனர். அதிலும் நாட்டு வெடிகுண்டுகளும், அரிவாள்களும் இருந்தன. அந்த கார்களையும், 9 நாட்டு வெடிகுண்டுகள், 27 அரிவாள்கள் ஆகிய பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 14 பேரையும் போலீசார் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வந்தனர். அவர்களை தனித்தனியாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டைக்கொலையில் யார், யாருக்கு தொடர்பு இருக்கிறது? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டது. மேலும் அவர்கள் முக்கிய பிரமுகர்கள் யாரையாவது கொலை செய்ய சதி திட்டம் தீட்டினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

துணை கமிஷனர் பேட்டி

இதுகுறித்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுகுணாசிங் கூறியதாவது:-

சத்திரம் புகுக்குளம் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் நள்ளிரவில் சோதனை செய்தனர். அப்போது எங்களுக்கு வந்த தகவல் உறுதியானது. அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கண்ணபிரான் உள்பட 14 பேரை கைது செய்து இருக்கிறோம். அவர்கள் ஏன் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து இருந்தார்கள்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டு வெடிகுண்டுகள், அரிவாளுடன் 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வாள்கள்.

Next Story