கேரள அரசை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் சாலை மறியல்


கேரள அரசை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Jan 2019 3:45 AM IST (Updated: 5 Jan 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் கேரள அரசை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் சாலைமறியல் செய்தனர்.

தேனி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் கேரள போலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் தரிசனம் செய்த சம்பவத்தை தொடர்ந்து, கேரள அரசு மற்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை கண்டித்து தேனியில் இந்து எழுச்சி முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று சாலை மறியல் செய்வதற்காக திரண்டனர்.

இதையடுத்து அவர்கள், தேனி-பெரியகுளம் ரோட்டில் என்.ஆர்.டி. சாலை சந்திப்பு பகுதியில் இருந்து நேரு சிலை சிக்னல் வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் சிக்னல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்டவர்கள் கேரள அரசை கண்டித்தும், சபரிமலையின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story