கிருஷ்ணகிரியில் ஊருக்குள் புகுந்து ஆட்டை கவ்வி சென்ற சிறுத்தைப்புலி பொதுமக்கள் பீதி


கிருஷ்ணகிரியில் ஊருக்குள் புகுந்து ஆட்டை கவ்வி சென்ற சிறுத்தைப்புலி பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 4 Jan 2019 11:00 PM GMT (Updated: 2019-01-05T00:26:36+05:30)

கிருஷ்ணகிரியில் ஊருக்குள் புகுந்து ஆட்டை சிறுத்தைப்புலி கவ்வி சென்றதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல் தெருவை சேர்ந்தவர் குப்பன் (வயது 55). விவசாயி. ஆடுகள் வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் உள்ள பட்டியில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை கட்டி வைப்பது வழக்கம். தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள மலைப்பகுதிக்கு அழைத்து செல்லுவார்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் இவரது பட்டியில் இருந்து ஆட்டின் சத்தம் கேட்டது. இதனால் வீட்டிற்குள் இருந்த குப்பன் வெளியே வந்து பார்த்தார். அப்போது சிறுத்தைப்புலி ஒன்று பட்டிக்குள் நுழைந்து ஒரு ஆட்டின் கழுத்தை கவ்வி சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குப்பன் கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் சிறுத்தைப்புலி ஆட்டை கவ்வி கொண்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள், கிருஷ்ணகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கிருஷ்ணகிரி வனச்சரகர் நாகேஷ் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.

அதே போல கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரும், வனத்துறையினரும் இது தொடர்பாக குப்பனிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து சிறுத்தைப்புலி போன மலைப்பகுதியின் அருகில் சென்று வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தனர். ஆனால் சிறுத்தைப்புலி வெளியே வரவில்லை. இதைத் தொடர்ந்து அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிருஷ்ணகிரி அருகே மேலுகொல்லை கிராமத்திற்குள் வந்த சிறுத்தைப்புலி விவசாயி ராமமூர்த்தி என்பவரை கடிக்க முயன்றது. அந்த நேரம் அவர், அரிவாளால் வெட்டி சிறுத்தைப்புலியை கொன்றார்.

மேலும் சூளகிரி பகுதியில் சிறுத்தைப்புலி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி பலியான சம்பவங்களும் நடந்துள்ளன. தற்போது மீண்டும் சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Next Story