உணவு பொருட்களின் தரம் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் அன்பழகன் பேட்டி


உணவு பொருட்களின் தரம் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் அன்பழகன் பேட்டி
x
தினத்தந்தி 5 Jan 2019 4:30 AM IST (Updated: 5 Jan 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

உணவு பொருட்களின் தரம் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் அன்பழகன் கூறினார்.

கரூர்,

தமிழகத்தில் பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் சில கடைகளில் கலப்பட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உணவு பாதுகாப்பு துறை யினர் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கலப்படமான பொருட்களை எவ்வாறு கண்டறிவது? என்பது பற்றி நேரடி செயல்விளக்கத்தை மக்களுக்கு அளிக்கும் பொருட்டு, கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் “பாதுகாப்பான உணவு குறித்த விழிப்புணர்வு அரங்கு” அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதன் பின்னர் நடந்த முகாமில், உணவக உரிமையாளர்கள் மற்றும் சில்லரை அங்காடி உரிமையாளர்களுக்கு, உணவுப் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு அறிவிப்பு கொண்ட பதாகைகளை வழங்கி, அவற்றை அவரவர் உணவு வணிக நிறுவனங் களில் பொதுமக்கள் பார்வையில் எளிதில் படும்படி காட்சிப்படுத்த அறிவுறுத்தினார். மேலும், பாதுகாப்பான உணவு மற்றும் பாதுகாப்பற்ற உணவு வகைகள் குறித்த காட்சிபடுத்துதல் மற்றும் விளக்கப்படுத்துதல் முகாமினை பார்வையிட்டு, அதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறையினரிடம் விளக்கங்களைக் கேட்டறிந்தார். மேலும் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கு மாற்று ஏற்படாக உள்ள பொருட்கள் மூலம் பிளாஸ்டிக்கின் தீமைகள் பற்றி எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், உணவு பொருட்களின் தரம் தொடர்பாக 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 மணிநேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாம் வருகிற 31-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் செய்யப்படும் கலப்படங்களை உணவு பாதுகாப்புத்துறை அதி காரிகள் பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துரைக்கின்றனர். மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டி பயன்பாடு இருப்பது கண்டறியப்பட்டவுடனேயே அதனை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். என்றார்.

அதனை தொடர்ந்து கோவிலைச்சுற்றியுள்ள கடைகளில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற அரசு அறிவிப்பை எடுத்துக்கூறி கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சசிதீபா, கரூர் வட்டாட்சியர் ஈஸ்வரன், கரூர் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் கருப்பசாமி, உணவக உரிமையாளர்கள் லெட்சுமணபெருமாள், மோகன் மற்றும் பலர் கலந்துககொண்டனர்.

Next Story